புதிய இயல்பு நிலையை உருவாக்குவோம் வாரீர்.


கோவிட்-19 முடக்கங்களுக்குப் பிறகு அனைவரும் இயல்பு நிலைக்குத் திரும்ப விரும்புகிறார்கள். நாம் அனைவரும் எமது வாழ்க்கையில் நடைபெறும் சில விருப்பமான செயல்களைத் தொலைத்துள்ளோம். அதன் காரணமாக பலர் பழைய இயல்பு நிலைக்குத் எப்போது திரும்புவோம் என்று காத்துக்கொண்டுள்ளனர்.

எமது சமூகத்தின் எல்லா நிலையினரும் அவ்வாறு  பழைய சாதாரண நிலைக்குத் திரும்ப ஏங்குகிறார்களா ?

இதற்கான பதில், இல்லை. எமது சமூகத்தின் எல்லா நிலையினரும் அவ்வாறு  பழைய சாதாரண நிலைக்குத் திரும்ப ஏங்குகவில்லை. பெண்களை விட அதிகமான ஆண்கள் பழைய சாதாரண நிலைக்குத்  திரும்ப விரும்புகிறார்கள். ஏழை மக்களைவிட  விட அதிகமாக பணக்காரர்கள்  அந்த பழைய இயல்புநிலைக்குத் திரும்ப விரும்புகிறார்கள்.

ஏனெனில் அந்த பழைய நிலை ஆண்களுக்கும், பணக்காரர்களுக்கும் , பெரும் முதலாளிகளுக்கும்    சலுகைகளை,  அனுகூலத்தை , அதிகாரத்தை, முன்னுரிமையை கொடுத்தது. அதனாலேயே வளமைக்கு நாடு எப்போது திரும்பும் என அவர்கள் காத்திருக்கிறார்கள்.

ஏழைகள், புறந்தள்ளப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள்,சிறுவர் தோட்டத்தொழிலாளர், அன்றாடம் உழைப்போர் போன்றோர் இதுவரை இருந்த பழைய இயல்பு நிலைக்கு திரும்பி செல்ல விரும்பவில்லை,  புதிய இயல்பு நிலை ஒன்று உருவாகுமா? என்று ஏங்குகிறார்கள். உருவாக்கப்படும் புதிய இயல்பு நிலையிலாவது சமமான உரிமைகள் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

இந்தப்  புதிய இயல்பு நிலைக்கு திரும்புவது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கவனமாகவும் பேச்சுவார்த்தையுடனும் நடைபெறவேண்டும். ஏனென்றால் இதுபோல நம்மிடையே பல்வேறு நிலைகளில் புறக்கணிக்கப்பட்ட மக்கள் சலுகை, ஆதாயம், அதிகாரம் இல்லாதவர்களாக வாழ்ந்துவருகின்றனர்.

திருமறையின் வெளிச்சத்தில் அழிவுப்பின் உருவாக்கப்பட்டச்  சமநிலைச் சமூகம்:

முதல் உடன்படிக்கை நூலான பழைய ஏற்பாட்டில், எருசலேமின் அழிவு, முன்னணி தலைவர்கள் நாடுகடத்தப்பட்ட நிலை இவை இரண்டுக்கும் பிறகு 'இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும்' என்ற சிந்தனையை உருவாக்கியது. இந்தப் பேரழிவின் காரணமாக, 'அடுத்து என்ன நிகழும்? ' என்று பல  குடிமக்கள் கேள்வி எழுப்பினர்.  பண்டைய இஸ்ரயேலரின் இறைவாக்குப் பாரம்பரியத்தில், எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையையும் எதிர்பார்ப்பையும் பிரதிபலிக்கும் இரண்டு திருமறைப் பகுதிகளில் ஒன்று ஏசாயா 1: 21-26. அழிவுக்குப் பின் நம்பிக்கையின் செய்தியை அளிக்கும் பகுதிகள் பல உள்ளன, இருப்பினும் இந்தப்  பகுதி தனித்துவமான சொற்றொடர்களைக் கொண்டுள்ளது.

ஏசாயா 1: 21-26இல், இடம் பெறும் கவிதை ஏசாயா நூலின் முதன்மை கருப்பொருள்களை அறிவிக்கிறது:

1.   எருசலேம் நகரத்தின் தோல்வி (வ. 21-23)

2.   எருசலேம் நகரத்தின் அழிவு (வ. 24-25).

திருமொழி 26, பேரழிவுக்குப் பிறகு என்ன நடக்கப் போகிறது என்பதைப்  பிரதிபலிக்கிறது:

முன்னாளில் இருந்தது போலவே உன் நீதிபதிகளைத் திருப்பிக் கொணர்வேன்; தொடக்க காலத்தில் இருந்தது போலவே உன் ஆலோசகர்களை மீண்டும் தருவேன்; அப்பொழுது எருசலேம் 'நீதியின் நகர்' (நீதிபுரம்) எனப் பெயர் பெறும்; 'உண்மையின் உறைவிடம்' (சத்திய நகரம்) எனவும் அழைக்கப்படும்.

இந்த சொல்லாடல்களில் இரண்டு சொற்கள் மிக முக்கியமானவை.

1.   முதலில், 'மீட்டமைத்தல்' 'மீட்டெடுத்தல்' (Shuv) என்ற வினைச்சொல் உள்ளது.

    கடவுள் இஸ்ரேலுக்கு அதன் வாழ்க்கையைத் திருப்பித் தருவார்.

2.   இரண்டாவதாக, 'முன்னாளில்;' (அல்லது 'ஆரம்பத்தில்')

இவை இரண்டும்  மிகவும் தனித்துவமான சொற்கள்.

முன்னாளில் இருந்த நீதிபதிகளின் சமூக  அமைப்பு உருவாக்கி மீட்டமைக்க விரும்பிய கடவுள்:

'நியாதிபதிகள் நூலில் அறியப்பட்ட ஒரு சிறிய கிராமப்புற பொருளாதாரத்தை நீதிபதிகளின் சமூக  அமைப்பு பிரதிபலிக்கிறது. அதாவது பெரிய நகரத்தில் இருப்பது போல அதிகார மையங்கள் இல்லாத ஒரு சமநிலை அமைப்பு., இதில் வாழ்வோர் மிக எச்சரிக்கையுடன் வாழ்வர், கடவுளின் ஆளுகைக்கு கீழ் மிக கவனமாக இருத்தல் அவசியம்.  இருப்பினும் இஸ்ரயேல் மக்களுக்கு இந்த அமைப்பிற்குள் வாழ்வதற்கு சிரமமாக இருந்தது. எனவே கடவுளின் கட்டளைகளுக்குக் கீழ் படியாமல் பாவம் செய்கின்றனர். நியாயதீர்ப்பைப் பெறுகின்றனர், பாவமன்னிப்பிற்காக கூக்குரலிடுகின்றனர், மீண்டும் கடவுள் அவர்களை மன்னிக்கிறார்.

•    கீழ்ப்படியாமை

•    நியாயத்தீர்ப்பு

•    விண்ணப்பம் செய்தல்

•    மீட்பு பெற்றுக்கொள்ளல்

என்ற உடன்படிக்கை சூத்திரத்தின்படி நியாதிபதிகளின் சமூக வரலாறு இயங்கியது.

(நீதித்தலைவர் 3: 7-11)

ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதை இஸ்ரயேலர் செய்தனர். தங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்து, பாகாலுக்கும் அசேராக்களுக்கும் ஊழியம் செய்தனர். இஸ்ரயேலருக்கு எதிராக ஆண்டவரின் சினம் மூண்டது. அவர் அவர்களை மெசப்பொத்தாமியா மன்னன் கூசான் ரிசத் தாயிமிடம் ஒப்படைத்து விட்டார். இஸ்ரயேலர் கூசான் ரிசத்தாயிமுக்கு எட்டாண்டுகள் அடிமைப்பட்டிருந்தனர். இஸ்ரயேலர் ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிட்டனர். ஆண்டவர் அவர்களுக்கு விடுதலை அளிக்க ஒருவரை எழச் செய்தார். அவர் காலேபின் இளைய சகோதரரான கெனாசின் மகன் ஒத்னியேல். அவர் அவர்களுக்கு விடுதலை அளித்தார்.

அவர்மீது ஆண்டவரின் ஆவி இருந்தது. அவர் இஸ்ரயேலருக்கு நீதித்தீர்ப்பு வழங்கினார். அவர் போருக்குச் சென்றார். அவரிடம் மெசப்பொத்தாமியா மன்னன் கூசான் ரிசத்தாயிமை ஆண்டவர் ஒப்படைத்தார். அவர் கூசான் ரிசத்தாயிமின் மீது வெற்றி கொண்டார்.நாடு நாற்பது ஆண்டுகள் அமைதியாக இருந்தது. பின் கெனாசின் மகன் ஒத்னியேல் இறந்தார். பின் பழைய இயல்பு நிலைக்குத் திரும்பியது அச்சமூகம்.

இஸ்ரயேல் மக்களுக்கு நினைவுகளில் சுமத்தப்பட்ட ஒரு கடினமான சமூக அமைப்பாக இது தோன்றியது. ஊழல் செய்து, ஏழைகளிடமிருந்து சுரண்டிய செல்வங்களை சேர்த்துவைத்த எருசலேம் திருக்கோவிலின் பகட்டாரவாரமின்றி, பெரிய இராணுவ பாதுகாப்பு இல்லாமல், மிகவும் வளர்ந்த தொழில்நுட்பம் இல்லாமல்,  சுயலாபத்தை மையப்படுத்தும் பொருளாதார கொள்கைகள் எதுவுமின்றி,  எளிமையாக, கடவுளின் ஆளுகையை நேரடியாக நடைமுறை படுத்தும் அமைப்பாக இந்த நியாதிபதிகளின் சமூக அமைப்பு இருந்தது.

இன்றைய விலைவாசி உயர்வின் காரணம் என்ன?

கிராம பொருளாதாரத்தை மையப்படுத்தும் சுயசார்பு கொள்கை எம்மிடம் இல்லை, பெரும் முதலாளிகளின் சுயலாபத்திருக்கு நாம் பலிக்கடாவாக்கப் பட்டிருக்கிறோம். எமது பண்பாட்டிற்கும், நிலஅமைப்பிற்கும் பொருத்தமில்லாத பல பொருட்கள் இன்றி எம்மால் இப்போது வாழமுடியாது. இந்தநிலைக்கு நம்மை கொண்டு வந்திருக்கிறது நகர பொருளாதார அமைப்பு. அதற்கு நாமும் காரணம் என்பதை மறுக்கமுடியாது.

இன்றைய விலைவாசி உயர்வு பால்மா, எரிவாயு, சீனி, எரிபொருள் ஏன் ஏற்படவேண்டும்? இவையெல்லாம் பதுக்கிவைக்கப்படுகின்றனவா ?

நகர்ப்புற பொருளாதாரத்தை மையமாக கொண்ட உலகில் அடிக்கடி விலைவாசி ஏற்றம் நடைபெறுகிறது. மறுபுறம்  கிராமப்புற பொருளாதாரம் என்பது மிகவும் எளிமையான இயற்கையோடும், சக மனிதர்களோடும்  இசைந்து வாழக்கூடிய ஒரு அமைப்பு. எடுத்துக்காட்டாக சில விடயங்களை நாம் நினைவுகூற வேண்டும், இலங்கையில் தமிழர் வாழ் பகுதிகளில், யுத்த நாட்களில் உடுப்புத் துவைக்கக் பனங்காயை பயன்படுத்துவார்கள், எரிபொருள் இல்லையென்றாலும் சிக்கனமாக கிடைக்கும் எரிபொருளில் (மண்ணெண்ணெய்) வாகனங்கள்  ஓட்டுவார்கள், இருக்கும் எண்ணெய்யை வைத்து ஜாம் போத்தில் (Jam bottle) விளக்குகளை பயன்படுத்துவார்கள், மின்சாரம் இல்லாவிட்டாலும் துவிச்சக்கர வண்டியிலுருந்து வானொலி  கேட்பார்கள், சீனி இல்லையென்றாலும் டொபியை கடித்துக்கொண்டுத் தேநீர் அருந்துவார்கள். இந்த அமைப்பே இயற்கையோடும் சக மனிதர்களோடும் இசைந்து வாழும் ''நியாதிபதிகளின் சமூக  அமைப்பு', கடவுள் விரும்பும் அமைப்பு.

நகர பொருளாதாரத்தை முன்னிறுத்தும், மனித நிர்வாகம் போல ஒழுங்குபடுத்தும் அமைப்போ (காவல்த் துறை), பாதுகாப்போ (இராணுவம்), சுரண்டலோ இங்கு இருக்க போவதில்லை.

ஏசாயா முன்குறித்த கிராம பொருளாதாரத்தை மையமாக கொண்ட எதிர்பார்க்கப்பட்ட சமூக அமைப்பு  நிச்சயமாக 'புதிய எருசலேம்'. எல்லா மக்களையும் உள்ளடக்கிய சமூகநீதி சமூகமே இந்த புதிய எருசலேம்.

மறுசீரமைப்பு உண்மையில் கடவுளின் பரிசு, இருப்பினும், சமூகம் மீண்டும் கட்டியெழுப்பவேண்டிய பணி நம்மிலிருந்து தொடங்க வேண்டும், நாங்கள் செயலற்ற பெறுநர்கள் அல்ல. செயலுள்ள கொடுப்பவர்களாகவும் மாற வேண்டும். எமது கிராமப்புற பொருளாதாரத்தை எமது வாழ்வில் நடைமுறைப்படுத்த, பழக்கப்பட்ட பல சுயநல செயல்களை நாம் தவிர்க்க வேண்டிய அவசியம் ஏற்படும், அதை நாம் பிறர் நன்மைக்காக செய்கிறபோது, நாம் கடவுளின் பிள்ளைகளாக மாறுகிறோம்

'புதிய எருசலேமை' இம்மண்ணில் கட்டியெழுப்புவோம்:

முன்னாளில் இருந்தது போலவே உன் நீதிபதிகளைத் திருப்பிக் கொணர்வேன்; தொடக்க காலத்தில் இருந்தது போலவே உன் ஆலோசகர்களை மீண்டும் தருவேன்; அப்பொழுது எருசலேம் 'நீதியின் நகர்' எனப் பெயர் பெறும்; 'உண்மையின் உறைவிடம்' எனவும் அழைக்கப்படும். எசாயா 1: 26

இந்த இறைவாக்கு எமது காலத்தில் நிறைவேற வேண்டும் என்றால் மனமாற்றம் எம்மிலிருந்து தொடங்க வேண்டும். ஆம், அன்பான இறைமக்களே, கொரோனா முடக்கம் என்பது எமது வாழ்வில் ஒரு பேரழிவு. இந்தப் பேரழிவுக்குப் பின்னாவது நாம் இஸ்ரயேல் மக்களைப் போல கடவுளிடம் கூக்குரலிட்டு, மன்றாடி பாவங்களை எல்லாம் அறிக்கையிட்டு சுயநல வாழ்வை அடியோடு மாற்றிக்கொள்வோம். புதிய இயல்பு நிலையை உருவாக்க, பிறர் நலனில் அக்கறை, மன்னிப்பு, இரக்கம், விருந்தோம்பல், நீதி, சமத்துவம் ஆகிய இறையாளுகையின் விழுமியங்களை வாழ்க்கையில் செயல் படுத்துபவர்களாக மாறுவோம். ஏசாயாவால் முன்குறிக்கப்பட்ட கிராம பொருளாதாரத்தை மையமாக கொண்ட, ஏழைகள், புறந்தள்ளப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், சிறுவர் என எல்லா மக்களையும் உள்ளடக்கிய சமூகநீதி சமூகமான 'புதிய எருசலேமை' இம்மண்ணில் கட்டியெழுப்புவோம்.

Comments

Popular Posts